நீலகிரி நாடோடி
நீலகிரி நாடோடி
நீலகிரி மாவட்டம் என்றாலே சமவெளிவாசிகளான நமக்கு சட்டென்று ஞாபகம் வருவது, குன்னூர் (தெற்கு), ஊட்டி (மையம்), முதுமலை (வடக்கு), மற்றும் கோத்தகிரி (கிழக்கு) தான். ஏறக்குறைய 90 சதவீத சுற்றுலா பயணிகள் நீலகிரியில் இந்தப்பகுதிகளுக்குத்தான் செல்கிறார்கள். ஆனால் இன்னும் அந்த அளவுக்கு பிரபலமாகாத ஆனால் அழகான, அருமையான இடங்கள் நீலகிரியின் மேற்கிலுள்ள மஞ்சூர் பகுதியில் உள்ளன. அவற்றில் பொதுமக்களுக்கு அனுமதியுள்ள, அவசியம் பார்க்கவேண்டிய ஒருசில இடங்கள் உள்ளன - மஞ்சூர், அன்னமலை, கெத்தை, தாய்சோலை, கிண்ணக்கொரை, கோரகுந்தா, அவலாஞ்சி, எமரால்டு, முள்ளிகூர்.
மஞ்சூருக்கு குன்னூருக்கு மூன்று கிமீ முன்னால் வரும் காட்டேரி ஜங்க்ஷனிலிருந்து மேற்கே பிரியும் சாலையில் ஏறக்குறைய 30 கிமீ செல்ல வேண்டும். மஞ்சூரைத்தவிர வழியில் சேலாஸ் என்ற இடத்தில் மட்டும் பெட்ரோல் பங்க் உள்ளது. பிறகு கைகாட்டி, சாம்ராஜ் எஸ்டேட் வழியாக செல்லவேண்டும். சாம்ராஜ் எஸ்டேட்டில் அவர்களின் அழகிய சாலையோர தேநீரகத்தில் சற்றே இளைப்பாறி கிளம்பலாம். பக்கத்திலேயே எஸ்டேட்டுக்கு சொந்தமான ஒரு அமைதியான, அழகான பெருமாள் ஆலயமும் உள்ளது.
சாம்ராஜை தாண்டினால் சரேலென்று கொண்டை ஊசி வளைவுகளில் இறங்க வேண்டும். இறங்கினால் ராமையா பாலம் (பெயர்க்காரணம் தெரியுமா), அதிலிருந்து குந்தா டேம் பார்க்கலாம். இப்போது மறுபடி கொண்டைஊசி வளைவுகளில் மேலே ஏற வேண்டும். ஏறும்போது குந்தா நீர்தேக்கமும், மின் நிலையமும் தெரியும். சிறிது கவனத்தோடு பார்த்துக்கொண்டு வந்தால் ஒரு சிறிய அழகான நீர்வீழ்ச்சியும் பார்க்கலாம். கொண்டைஊசிவளைவுகள் முடியும் தருவாயில் குந்தா ஆய்வு மாளிகை வலதுபுறம் வரும். பிறகு குந்தா நீர்மின்னுற்பத்தி நிலைய அலுவலகம் வரும். இடதுபுறம் பிரியும் சாலை அன்னமலை, கெத்தை வழியாக கோவை செல்லும் பாதை. நேரே சென்றால் ஒரு கிமீயில் மஞ்சூர்.
மஞ்சூர். பெயருக்கேற்ப மேகங்கள் வலம்வரும் இடம். கிராமம் என்றோ நகரம் என்றோ சொல்லமுடியாத ஒரு சிற்றூர் என்றாலும் ஏறக்குறைய நமக்கு தேவையானவை எல்லாம் கிடைக்கும் ஊர். தங்கும் விடுதிகள், உணவகங்கள், பெட்ரோல் பங்க், மருத்துவமனை, மருந்து கடை, தேநீரகங்கள், மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள், தபால் அலுவலகம், வங்கிகள், ATM இயந்திரங்கள், வாடகை ஜீப்புகள், வாகன பழுதுபார்க்குமிடம், கம்பளி ஆடையகம் எல்லாம் உண்டு.
மழைக்காலத்தில் அதிக மழை கிடையாது, குளிர்காலத்தில் அதிக குளிர் கிடையாது, வெயில் காலத்தில் அதிக வெயில் கிடையாது. அப்படியொரு அற்புதமான ஊர். இருந்தாலும் மழை ஆரம்பிக்கும் ஜூன்-ஜூலையிலிருந்து குளிர் முடியும் ஜனவரி வரை கூட்டம்(?) சற்று குறைவாக இருக்கும், ஆனால் அதுதான் மிகச்சிறந்த சீசன். தங்குமிடம் தலைக்கு ஒரு நாள் ரூ. 300/400 முதல் ரூ 2000 (சாப்பாடு சேர்த்து) வரை. சாப்பாடு வெஜ்/நான்வெஜ் ஒரு நாள் தலைக்கு சராசரி ரூ. 150/250.
மஞ்சூருக்கு கீழே ஒரு கிமீயில் குந்தா உள்ளது. குந்தா நீர்மின்னுற்பத்தி நிலையங்களின் தலைமை அலுவலகம் இங்குதான் உள்ளது. இங்கு ஒரு சிறிய, ஆனால் அரிய, கண்டிப்பாக காணவேண்டிய அருங்காட்சியகம் உள்ளது, மாணவர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அனுமதி உண்டு. குந்தா நீர்மின்னுற்பத்தி நிலையங்களின் புவியியல்/வரலாற்றை சித்தரிக்கும் பலதரப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள், மற்றும் பழமையான கருவிகள் இங்கு பார்வைக்கு உள்ளன. தலைமை பொறியாளரின் அனுமதி பெற்று (கட்டணம் உண்டு) பார்வையிடலாம்.
மஞ்சூருக்கு அருகிலுள்ள மற்ற காண வேண்டிய இடங்கள்.
அன்னமலை முருகன் கோவில் - 3 கிமீ.
உருளைக்கண்டி பள்ளத்தாக்கு - 3 கிமீ
குந்தா நீர்மின் நிலையம் - 4 கிமீ.
மேல்குந்தா காட்சிமுனை - 5 கிமீ
குந்தா நீர்வீழ்ச்சி - 6 கிமீ.
பென்ஸ்டாக் வனவிடுதி காட்சிமுனை - 8 கிமீ.
இவ்விடங்களெல்லாம் மினி ட்ரெக் போல நடந்தே சென்று வரலாம், அல்லது சொந்த வாகனம்/வாடகை ஜீப்புகளில் போய்வரலாம்.