புலியும், நானும்!

Give your rating
Average: 4 (2 votes)
banner
Profile

THENMURUGAKANI

Loyalty Points : 250

Total Trips: 4 | View All Trips

Post Date : 04 Aug 2021
6 views

ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை நடத்தும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் (wildlife census) பணியில் "ஓசை" அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள். அவர்களில் சிலருக்கு வனத்துறை சிலசமயம் கானகப்பயணம் ஏற்பாடு செய்து தருவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு பயணம் (3 நாட்கள், 2 இரவு) 2013-ம் ஆண்டு டிசம்பரில் ஓசை காளிதாசன் அவர்கள் தலைமையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலுள்ள ஜீரஹள்ளியிலிருந்து கிளம்பி தெங்குமரஹடா வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தொடர்ந்தாற்போல் மூன்று நாட்களுக்கு லீவு கிடைக்காததால் என்னால் பங்கேற்க முடியவில்லை.

முதல் நாள் இரவு சத்தியமங்கலம் ஜீரஹள்ளி வனப்பகுதியில் தங்கிவிட்டு மறுநாள் அதிகாலை ட்ரெக்கிங் ஆரம்பித்து மாலையில் தெங்குமரஹடா வந்து இரவு தங்குவதாக பிளான். ஆனால் திடீரென்று ஓசை காளிதாசன் அவர்களுக்கு இரண்டாம் நாள் இரவு தெங்குமரஹடாவில் தங்காமல் கோவை வந்து சேரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் அவர் மட்டும் தெங்குமரஹடாவிலிருந்து திரும்ப கோவையிலிருந்து ஒரு Boleroவை ஓசை உறுப்பினர் அருள் எடுத்துவர ஏற்பாடாயிற்று. தனியாக ஏன் கோவையிலிருந்து போக வேண்டும் என்று எண்ணிய அருள் "துணைக்கு வருகின்றீர்களா? ஒருநாள் தானே" என்று என்னை கூப்பிட்டார். வலிய வந்த வாய்ப்பை தவறவிடமுடியுமா? சந்தோசமாக சரி! என்றேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2013. காலையில் கோவையிலிருந்து நாங்கள் கிளம்பும்போது, அருள் அவர்களின் பையன் முகிலனும் (கல்லூரி மாணவன்) சேர்ந்துகொள்ள, இப்போது வண்டியில் மூன்று ஆள். பவானிசாகரில் வழக்கம் போல வறுத்த மீன் சுடச்சுட. செக்போஸ்டில் ஏற்கனவே சொல்லியிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் தெங்குமரஹடா பயணம் தொடர்ந்தது. மனசெல்லாம் ஒருவித அச்சம் கலந்த ஆர்வம். ஏதாவது மிருகங்கள் தென்படாதா என்று கண்களை அலைய விட்டுக்கொண்டே சென்றோம். ஒரு சில புள்ளி மான்கள் தவிர ஒன்றும் சிக்கவில்லை. மண்டைகாயும் மரண வெயில் வேறு. ஒரு வழியாக மாயாற்றின் கரைக்கு வந்து சேர்ந்தோம். பிறகு த்ரில்லான பரிசல் சவாரி. ஏற்கனவே பழக்கம்தான் என்றாலும் பயம்தான்.

பிறகு நடைபயணமாக தெங்குமரஹடா ட்ரெக்கிங் ஷெட் வந்து சேர்ந்தோம். செமத்தியான லஞ்ச், வெள்ளாட்டு குழம்பும், வறுத்த மீனும். சாப்பிட்டுவிட்டு சின்னதா ஒரு சியெஸ்ட்டா. சாயங்காலம் ட்ரெக்கிங் கோஷ்டி வந்திறங்கிய சத்தத்தில்தான் முழித்தோம். ஆறரை மணிக்குமேல் கிளம்பலாம் என்று முடிவாயிற்று. ஆனால் ஒரு பிரச்சினை. Bolero வில் எங்களுடன் திரும்ப "நான், நீ" என்று ஒரே போட்டி. இதில் ட்ரெக்கிங்க்கு வழிகாட்டித்துணையாக வந்த இரண்டு வனத்துறையினரையும் பவானிசாகரில் இறக்கி விடவேண்டும். இருப்பதோ ஏழு சீட். ஒருவழியாக பஞ்சாயத்தெல்லாம் முடிந்து, கோவையிலிருந்து வந்த நாங்கள் மூன்று பேர், ஓசை காளிதாசன், வனத்துறையினர் இரண்டு பேர், மற்றும் இன்னொரு ஓசை உறுப்பினர், ஆக ஏழு பேர் திரும்புவது என்று முடிவாயிற்று. பரிசலில் திரும்பி bolero வைக்கிளப்பும்போது வெளிச்சம் குறைந்துவிட்டது.

வண்டியில் ட்ரெக்கிங் பற்றி சுவாரசியமாக பேசிக்கொண்டே வந்தோம். ஆங்காங்கே வழியில் கூட்டம் கூட்டமாக புள்ளிமான்கள், வண்ணமயமான காட்டுக்கோழிகள், காட்டுப்பன்றிகள், முயல்கள் என்று பார்த்துக்கொண்டே வந்தோம். ட்ரெக்கிங் ஷெட்டில் வண்டியில் வருவதற்கு ஏன் இந்த அடிதடி என்று அப்போதுதான் புரிந்தது. அப்படி ஒரு செம சைட்டிங். இப்போது சுத்தமாக இருட்டிவிட்டது. ஏழு மணிக்கு மேல் இருக்கும். திடீரென்று வண்டி ஒட்டிக்கொண்டிருந்த ஓசை காளிதாசன், "பாத்தீங்களா? பாத்தீங்களா?" என்று சத்தமாக கேட்டார். நாங்கள் ஆறு பேரும் கோரஸாக "எதை?" என்று கேட்டோம், நாங்க யாரும் எதையும் பார்க்கல. அவர் மிகவும் ஏமாற்றத்தோடு, "புலிங்க! யாரும் பாக்கலியா?" என்றார்.

எங்களுக்கோ அவர் சும்மா விளையாட்டுக்கு சொல்றாரா, இல்ல நெஜமாவே புலி பாத்தாரான்னு சந்தேகம். ரோட்டில முன்னால வலது புறமிருந்து இடது புறம் போனது என்று சொன்னார். அந்த இடத்தில ரோடு ஒரு பத்தடி அகலம் தான் இருந்தது. பிறகு ஒரு நிமிஷம் கழித்து வண்டியை கிளப்பினார். நாங்கள் ரிஸ்க் வேண்டாமே என்று எல்லா ஜன்னல்களையும் ஏற்றி விட்டோம். எங்கள் ஆறு பேரிடமும் பேச்சே இல்லை, இப்படி ஒரு சான்சை மிஸ் பண்ண சோகம் எங்க முகத்தில். ஒரு முப்பது, நாப்பதடி தாண்டியவுடன், வண்டியை என்ஜினை அணைக்காமல் நிறுத்திவிட்டு, ஓசை காளிதாசன் நடுவரிசை சீட்டில் உட்கார்ந்திருந்த என்னிடம், "தேன் சார், லெப்ட் சைடுல தரையில படுறமாதிரி டார்ச்சை அடிச்சுகிட்டே கொஞ்சம் கொஞ்சமா காட்டுக்குள்ள வெளிச்சத்தை நகர்த்துங்க, ஆனா ஜன்னலை திறக்காதிங்க " என்றார்.

நானும் டார்ச்சை ஆன் பண்ணி முதலில் வண்டியின் என்ஜினுக்கு இணையாக வெளிச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரோட்டை தாண்டி காட்டுக்குள் நகர்த்தினேன். ஒன்றும் தெரியவில்லை. வண்டிக்குள் ஒரே அமைதி. புலியின் நினைப்பைவிட அந்த இருட்டு அமைதி அதிக பீதியை கொடுத்தது. பிறகு நாங்கள் இருந்த நடுவரிசை சீட்டுக்கு இணையாக டார்ச் வெளிச்சத்தை காட்டுக்குள் உலவவிட்டேன். ம்ஹூம், ஒன்றும் இல்லை. பிறகு, இன்னும் சற்றே பின்னே தள்ளி டார்ச் வெளிச்சத்தை வண்டியின் பின்புறமிருந்து ஆரம்பித்து நகர்த்த தொடங்கினேன்.

ஏக சமயத்தில் ஏழு பேரிடமிருந்தும் "ஓ" என்று கஷ்டப்பட்டு அடக்கி மூச்சு சத்தம் வெளிப்பட்டது. ரோட்டோரத்தில் முகத்தில் எந்த சலனமுமின்றி பின்னங்கால்களில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தது, அந்த புலி! "தேன் சார், அது முகத்தில் டார்ச் அடித்து விடாதீர்கள்" என்று யாரோ சமயோஜிதமாக சொன்னார்கள். இப்போது ஆரம்ப அதிர்ச்சி போனவுடன், வண்டிக்குள் ஒரே பேச்சு சத்தம். "பார்க்க நாலஞ்சு வயசிருக்கும் போல", "பெண் புலி மாதிரி இருக்கு", "வேட்டைக்கு போய்கிட்டு இருக்குமோ?" நாங்கள் பேசிகொண்டேஇருக்க புலி மெதுவாக எழுந்து வண்டிக்கு இணையாக ரோட்டோரத்தில் நடக்க ஆரம்பித்தது. வண்டிக்கும், புலிக்கும் இடையே வெறும் அஞ்சாறு அடிதான் இடைவெளி. எங்கள் வண்டியை தாண்டியதும், திரும்பி வண்டியை சற்றும் சலனமில்லாத ஒரு நீண்ட நெடிய பார்வை பார்த்தது. பிறகு மெதுவாக காட்டுக்குள் நடையை கட்டியது.

கையில் கேமரா இருந்தாலும், படம் எடுக்க முயன்றால் ஒருசில கணநேரம் இழந்துவிடுவோமோ என்ற பயம். மறுபடியும் ஆசைதீர பார்க்க ஒரு வாய்ப்பு. இருபதாண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திப்பு புலியுடன். பிளான் செய்யப்படாத திடீர் பயணம். அதிர்ஷ்டம் வேண்டும் என்பதன் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. இப்போது நினைத்தாலும் மயிர்கூச்செரியும் சம்பவம்.

பின்குறிப்பு: பவானிசாகர் பஸ்ஸ்டாண்டில் அந்த இரண்டு வனத்துறையினரையும் இறக்கி விட்டவுடன், அவர்கள் ஓசை காளிதாசன் அவர்களிடம் வந்து மிக்க உணர்ச்சி வசப்பட்டு, "ரொம்ப நன்றிங்க அய்யா, ரொம்ப நன்றி" என்றார்கள். அவர் "இதிலென்ன இருக்கு, போய்ட்டுவாங்க" என்று சொல்ல, அவர்கள் இருவரும், "சார், நாங்க எங்க பதினைஞ்சு, இருபது வருஷ சர்விசுல இப்பதான் சார் புலிய முதமுதலா பாக்குறோம், ரொம்ப நன்றிங்கய்யா" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.